Monday, March 29, 2010

மேய்ப்பன்

கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய ஜனமாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார்.
சங்கீதம்-78:71
ஆடுகளின் பின்னாகத் திரிந்த தாவீதை தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலை மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார் என பார்கிறோம்
இந்த மேய்ப்பன் சங்கீதம் 23 ம் அதிகாரத்தில் கூறுகிறான்
1 கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்.
ஆம் கர்த்தர் அவனுடைய மேய்ப்பனாக இருந்தபடியால் அவன் தாழ்ச்சியடையவில்லை என பார்க்கிறோம். ஆம் இந்த நாட்களிலே கர்த்தர் நம்முடைய மேய்ப்பனாக இருந்தால் நாமும் இதே போல சொல்ல முடியும். கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்என்று.
கர்த்தர் நம்முடைய மேய்ப்பனாக இருந்தால் அவர் நம்மை எப்படி மேய்ப்பர் என்பதை இந்த அதிகாரத்தில் தெளிவாக கூறுகிறான்
பாருங்கள் அவர் நம்மை புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கொண்டுபோய் விடுகிறார். அவர் நம் ஆத்துமாவைத் தேற்றி நம்மை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
அவர் நம்மோடு கூட இருக்கிறார். நம்முடைய சத்துருக்களுக்கு முன்பாக பந்தியை ஆயத்தப்படுத்துகிறார், நம்முடைய ஜீவனுள்ள நாளெல்லாம் நம்மை பாதுகாக்கிறார். கர்த்தர் நம் மேய்ப்பனாக இருந்தால் இவிதமாக பல ஆசிர்வதங்களை நாம் பெற்றுக்கொள்ள முடியும். அதே சமயத்தில் மேய்ப்பன் என்று சொல்லுகின்ற சில ஓநாய்களுக்கு எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். நாம் எச்சரிக்கையாய் இருக்க திருமறையில் கூறப்பட்டுள்ள சில மேய்ப்பர்களை நாம் இங்கே பார்க்கலாம்
முதலாவது ஏசாயா 56 ம் அதிகாரம் 11 ம் வசனத்தை பார்க்கும்போது இங்கே ஒரு மேய்ப்பனை பற்றி கூறப்பட்டுள்ளது.
பகுத்தறிவில்லாத மேய்ப்பர்
இப்படிப்பட்ட பகுத்தறிவில்லாத மேய்ப்பர்களை பற்றி ஏசாயா தீர்க்கதரிசி கூறுகிறார் தன் தன் மூலையிலிருந்து தன் தன் பொழிவை நோக்கிக்கொண்டிருக்கிற திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்என்று
ஏசாயா 56 ம் அதிகாரம் 11 ம் வசனத்தை படிக்கும்போது இவ்விதமாக கூறுகிறார்
11 திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்; பகுத்தறிவில்லாத மேய்ப்பர்; அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் வழியையும் அவனவன் தன் தன் மூலையிலிருந்து தன் தன் பொழிவையும் நோக்கிக்கொண்டிருக்கிறான்.

ஆம் இப்படிப்பட்ட பகுத்தறிவில்லாத மேய்ப்பர்களுக்கு நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
எரேமியா - 10 ம் அதிகாரம் 21 ம் வசனத்தை பார்க்கும்போது இங்கே ஒரு மேய்ப்பனை பற்றி கூறப்பட்டுள்ளது.
மிருககுணமுள்ள மேய்ப்பர்
இங்கே நாம் பார்க்கும்போது கர்த்தரைத் தேடாத மேய்ப்பர்களை பற்றி எரேமியா தீர்கதரிசி கூறுகிறான் மிருககுணமுள்ள மேய்ப்பர்கள்என்று.
எரேமியா - 10 ம் அதிகாரம் 21 ம் வசனத்தை படிக்கும்போது இவ்விதமாக கூறுகிறார்
மேய்ப்பர்கள் மிருககுணமுள்ளவர்களாகி, கர்த்தரைத் தேடாமற்போனார்கள்; ஆகையால், அவர்கள் காரியம் வாய்க்காமற்போய், அவர்கள் மந்தையெல்லாம் சிதறடிக்கப்பட்டது.
கர்த்தரை தேடாத மேய்ப்பனிடத்தில் போனால் நாமும் சிதறடிக்கப்படுவோம் என்பதை மறந்து போகாதே.
லூக்கா- 11 ம் அதிகாரம் 23 ம் வசனத்தை படிக்கும்போது அருள்நாதர் இவ்விதமாக கூறுகிறார்
என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
எனவே இப்படிப்பட்ட மிருககுணமுள்ள மேய்ப்பர்களுக்கு நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
எசேக்கியேல் - 34 ம் அதிகாரம் 2 ம் வசனத்தை பார்க்கும்போது இங்கே ஒரு மேய்ப்பனை பற்றி கூறப்பட்டுள்ளது
தங்களையே மேய்க்கிற மேய்ப்பர்
இந்த மேய்ப்பர் எப்படி இருக்கிறார்கள் என பார்த்தால் இவர்கள் நெய்யைச் சாப்பிட்டு, ஆட்டுமயிரை உடுப்பாக்கிக்கொள்கிறார்கள்; கொழுத்ததை அடிக்கிறார்கள்; மந்தையையோ மேய்க்காமற்போகிறார்கள்.
பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்துண்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமற்போனவைகளைத் தேடாமலும் போய், பலாத்காரமும் கடூரமுமாய் அவைகளை ஆளுகிறார்கள்.
எசேக்கியேல் - 34 ம் அதிகாரம் 3, 4 ம் வசனங்களில் இதை தெளிவாக பார்க்கலாம்
5 ம் வசனத்தை பார்க்கும்போது
மேய்ப்பன் இல்லாததினால் அவைகள் சிதறுண்டுபோயின; சிதறுண்டுபோனவைகள் காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையாயின.
இப்படிப்பட்ட மேய்ப்பர்களுடைய மந்தைகள் காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையாயின என பார்க்கிறோம்.
நாமும் காட்டு மிருகத்திற்க்கு இரை ஆகாதபடி இப்படிபட்ட மேய்ப்பர்களுக்கு நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
இப்படிபட்ட மேய்ப்பரை பார்த்து கர்தர் கூறுகிறார் எசேக்கியேல் - 34 ம் அதிகாரம் 2 ம் வசனம்
தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ!
சகரியா - 11 ம் அதிகாரம் 17 ம் வசனத்தை பார்க்கும்போது இங்கே ஒரு மேய்ப்பனை பற்றி கூறப்பட்டுள்ளது.
மந்தையைக் கைவிடுகிற மேய்ப்பன்
இப்படிப்பட்ட மேய்ப்பர்களை கர்தர் வெறுக்கிறார் இவர்களை பற்றி தேவன் சகரியா தீர்கதரிசி முலமாக கூறுகிறார்
சகரியா - 11 : 17 ல்
மந்தையைக் கைவிடுகிற அபத்தமான மேய்ப்பனுக்கு ஐயோ! பட்டயம் அவன் புயத்தின்மேலும் அவன் வலதுகண்ணின்மேலும் வரும்; அவன் புயமுழுதும் சூம்பிப்போம்; அவன் வலதுகண் முற்றிலும் இருள் அடையும் என்றார்.
இப்படி பட்ட மேய்ப்பர்களை பற்றி எரேமியா தீர்கதரசி மூலமாக தேவன் எச்சரிக்கிறார் எரேமியா - 23 ம் அதிகாரம் 1,2ம் வசனத்தை படிக்கும்போது
1 என் மேய்ச்சலின் ஆடுகளைக் கெடுத்துச் சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்.

2 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு விரோதமாகச் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் என் ஆடுகளைப் பராமரியாமல், அவைகளைச் சிதறடித்து அவைகளைத் துரத்திவிட்டார்கள்; இதோ, நான் உங்கள்பேரில் உங்கள் செய்கைகளின் பொல்லாப்புக்கேற்ற தண்டனையை உங்கள்மேல் வருவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஆம் அன்பானவர்களே இப்படிப்பட்ட மேய்ப்பர்களுக்கு நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
அப்படியானால் நம்முடைய மேய்ப்பன் யார்?
நம்முடைய மேய்ப்பன் பகுத்தறிவுள்ள, மிருககுணமற்ற, மந்தையை கைவிடாத, தன்னையே மேய்க்காத, நமக்காக தன்னுடைய ஜீவனை கொடுக்கிற மேய்பனாக இருக்க வேண்டும்
யோவான் 10:14 ல் அருள்நாதர் கூறுகிறார்
நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
ஆம் அன்பானவர்களே கடைசி காலத்தில் வந்து இருகின்ற நாம் யாருக்கு பின்நாலேயும் ஓடாமல் ஆடுகளுடைய பெரிய மேய்ப்பராம், பிரதான மேய்ப்பர் இயேசுவிற்கு நம்மை ஒப்புகொடுப்போமா
நமக்காக தன்னுடைய கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்திய நல்ல மேய்ப்பனாம் நம் இயேசு கடைசி வரைக்கும் நம்முடைய ஜீவனை அழிவிலின்றும் அந்தகாரத்திலின்றும் விடுவிக்க வல்லவராக இருக்கிறார்.
எந்த பாவியேயும் தள்ளாத நேசர் இதோ நம்மையும் அழைக்கிறார்
நம்முடைய முழங்கால்களை அவருக்கு முன்பாக முடக்குவோமா, அப்பா என்னையும் உம்முடைய மந்தையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்போமா
கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக! ஆமென்!

Thursday, March 25, 2010

தேவ சித்தம்

எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
1 தெசலோனிக்கேயர் 5: 16-18.
ஆம் அன்பானவர்களே நம்மை குறித்து நம் தேவனுடைய சித்தம் எப்பொழுதும் ஸ்தோத்திரஞ்செய்ய வேண்டும் என்பதே
இந்த வருட, முதல் மாதத்தின் கடைசி நாட்களில் நாம் வந்து இருக்கிறோம். இந்த மாதம் முழுவதும் தேவன் நம்மை நடத்தி வந்த பாதைகள் எத்தனை அருமையானவைகள்! நம்மை ஜீவனோடு காத்து, சுகபெலத்தை கொடுத்து ஒவ்வொரு நாளும் தமது கிருபையால் நம்மை வழிநடத்தினாரே! நமது போக்கையும் வரத்தையும் அருமையாய் காத்து வேலையிடத்தில் ஞானத்தை கொடுத்து வழிநடத்தினாரே
உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார். என்ற வசனத்தின்படி நம்மை உறங்காது இந்த மாதம் முழுவதும் நம்மை பாதுகாத்தாரே!
இப்படி தேவன் அதிசயமாய் நடத்தி வந்த வழிகளை நினைத்து, நாம் அவரை ஸ்தோத்திரிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
கர்த்தர் நமக்கு செய்த எல்லா உபகாரங்களுக்கும் ஈடாக நாம் என்னத்தை செலுத்த முடியும்? சங்கீதம் 116:13-14 ல் சங்கீதக்காரன் கூறியது போல 'கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்' என்று நமது உள்ளத்தின் ஆழத்திலிருந்து அப்பா நீர் எனக்கு செய்த எல்லா உபகாரங்களுக்காகவும் உமக்கு ஸ்தோத்திரம் என்று நம்முடைய ஸ்தோத்திர பலியை செலுத்துவோமா
எபிரெயர் 13:14,15 ல் அப்போஸ்தலனாகிய பவுல் பவுல் கூறியது போல
14 நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம் .
15 ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.
ஆம் அன்பானவர்களே இப்படி செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
அவருடைய நாமத்தைத் துதிக்கும், உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை செலுத்தும் சீயோன் குமாரத்தியே இதோ கர்த்தர் கொடுக்கும் வாக்குத்தத்தம் சகரியா – 2:10
சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தர் தாமே நம் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக ஆமென்

Wednesday, March 10, 2010

அனைத்தும் நன்மைக்கே

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். - (ரோமர் 8:28).

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் என அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார்
. சகலமும் என்று சொல்லும்போது, அது நன்மையான காரியங்களாய் இருக்கலாம், அல்லது தீமையான காரியங்களாய் இருக்கலாம், கர்த்தரிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு எல்லாம் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது. சிலவேளை நாம் நம் வாழ்வில், வேலையிடத்தில், குடும்பத்தில் வரும் துன்பமான காரியங்களை வைத்து, தேவனுக்கு என்மேல் அன்பேயில்லை, எனிக்கு ஏன் இந்த துன்பம் என கேட்கலாம் ஆனால் ஒன்று மட்டும் உண்மை கர்த்தரிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது.
இதை யோசேப்பின் வாழ்க்கையில் பார்க்க முடியும் ஆதியாகமம் 45:5 ஐ படிக்கும்போது
என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்'
என்று கூறுவதை காண்கிறோம். ஒருவேளை யோசேப்பின் சகோதரர் அவனை விற்றபோது, தன் எதிர்காலம், தன் கனவுகள் எல்லாம் அழிந்து போனது என்று யோசேப்பு நினைத்திருக்கலாம். இனி எனக்கு வாழ்வேது என்று நினைத்திருக்கலாம். ஆனால் ஒருநாள் வந்தது, அவனை தேவன் எகிப்து முழுவதற்கும் அதிகாரியாக மாற்றினார், ஆம் தீமைஅனைத்தையும் நன்மையாக மாற்றும் தேவன் நம் தேவன்.
இன்னும் யோனாவின் வாழ்க்கையை பார்க்கும்போது யோனா 1:15 ஐ படிக்கும்போது
யோனாவை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிட்டார்கள்;
என பார்கிறோம் ஒருவேளை யோனா நினைத்திருக்கலாம் நான் இதோடு மரித்தது போவேன் என்று. பாருங்கள் தேவன் யோனாவை விடுவித்தது மட்டும் அல்ல யோனா முலமாக நினிவேக்கு ஒரு பெரிய இரட்ச்சிப்பை கட்டளையிட்டார்

அவருடைய தீர்மானத்தின்படி அவருடைய பிள்ளைகளாய் இருக்கும் நமக்கு
கர்த்தர் கொடுக்கும் வாக்குத்தத்தம்
எரேமியா - 29:11
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.

ஆமென்

Sunday, March 7, 2010

விட்டு ஓடு

நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.
1 தீமோத்தேயு 6:11
இந்த நாட்களில் இரண்டு முக்கியமான காரியத்தை விட்டு ஓடும் படி தேவன் நம்மை எச்சரிக்கிறார்
முதலாவதாக வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்
அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்தியரூக்கு எழுதிய நிருபத்தில் இவ்விதமாக கூறுகிறார் 1 கொரிந்தியர் 6:18 ஐ படிக்கும் போது
வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.
யோசேப்பை பாருங்கள்,
ஆதியாகமம் 39 தாம் அதிகாரம் 12 ம் வசனத்தை படிக்கும் போது
அப்பொழுது அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றான். அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான்
ஆம் அன்பானவர்களே யோசேப்பு, பாவம் செய்ய தூண்டும் இடத்தை விட்டு ஓடிப் போனான் என்று வாசிக்கிறோம். ஆம் அப்படி அவன் ஓடி போனதால் அந்த நாட்டிற்கே அதிபதியாய் ஆனான் என பார்க்கிறோம். கர்த்தர் நம்மை ஆசிர்வதிக்க வேண்டுமானால் நாமும் இப்படி பட்ட காரியத்திற்கு விலகி ஓடும் படி தேவன் நம்மை எச்சரிக்கிறார்
இரண்டாவதாக விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்
1 கொரிந்தியர் 10:14 ஐ படிக்கும் போது

ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.
ஆம் இன்று உலகம் விக்ரகத்துக்கு பின்னாக ஓடிக்கொண்டு இருக்கிறது தேவன் எச்சரிக்கிறார் விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள் என்று.
அப்போஸ்தலனாகிய யோவான் 1 யோவான் – 5:21 ல் நம்மை பார்த்து கூறுகிறார்
பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக.
வெளிப்படுத்தின விசேஷம் 21 ம் அதிகாரம் 8 ம் வசனத்தில்
……..விக்கிரகாராதனைக்காரரும்…………. அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்
என பார்க்கிறோம்
அக்கினிக்கு இரை ஆகாதபடி விக்கிரகங்களுக்கு விலகி ஓட தேவன் நம்மை எச்சரிக்கிறார்
ஆம் அன்பானவர்களே பவுல் தீமோத்தேயுக்கு கூறியது போல இன்று தேவன் நம்மை பார்த்து கூறுகிறார். நம்மை வழிவிலக செய்யும் பாவமான காரியங்களை விட்டுவிட்டு, நீதியையும் தேவபக்தியையும், மற்ற காரியங்களையும் அடையும்படி தேவன் நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்திலே பொறுமையோடே ஓடக்கடவோம். கர்த்தர் தாமே நம் அனைவரயும் ஆசிர்வதிப்பாராக ஆமென் ……..